இன்று சிறையில் இருந்து பரோலில் வருகிறார் நளினி!

மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக வேலூர் சிறையில் இருந்து, நளினி இன்று பரோலில் வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள நளினி, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக 6 மாத பரோல் வழங்குமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் ஒரு மாதம் பரோல் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில் ஒரு மாத பரோலில் இன்று நளினி விடுவிக்கப்படுகிறார். சத்துவாச்சாரியில் உள்ள உறவினர் வீட்டில் நளினி தங்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவருக்கு சிறைத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.