காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்களித்த 2 பாஜக எம்எல்ஏக்கள்!

காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்களித்த 2 பாஜக எம்எல்ஏக்கள்!

Follow us on Google News Click Here

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற கிரிமினல் சட்டத் திருத்தத்தின் மீதான வாக்கெடுப்பில் காங்கிரஸுக்கு ஆதரவாக பாஜக எம்எல்ஏக்கள் இருவர் வாக்களித்தது பாஜகவினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்று கமல்நாத் தலைமையில் ஆட்சியமைத்தது. மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைத்து 7 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், அம்மாநில சட்டப்பேரவையில் குற்றவியல் சட்டமசோதா 2019 மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. அந்த வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக 122 பேர் வாக்களித்தனர். 230 பேர் கொண்ட மத்திய பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு 121 எம்எல்ஏக்கள் உள்ளனர். இந்த மசோதாவிற்கு சபாநாயகர் ப்ரஜபதி நீங்கலாக ஆதரவாக 120 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 2 பாஜக எம்எல்ஏக்களும் வாக்களித்தனர்.

கர்நாடகாவில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்து, ஆட்சியை பாஜக கைப்பற்றியுள்ள நிலையில், மத்திய பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏக்கள் இருவர் காங்கிரஸுக்கு ஆதரவளித்தது பாஜகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மைகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாராயன் திரிபாதி மற்றும் பியோஹரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஷரத் கவுல் ஆகியோர் தான் காங்கிரஸுக்கு ஆதரவாக வாக்களித்த பாஜக எம்எல்ஏக்கள் ஆவர். வாக்கெடுப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த இருவரும் தங்கள் தொகுதிக்கு நலத்திட்டங்கள் தேவை அதன் காரணமாகவே நாங்கள் கமல்நாத் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தோம் என்று தெரிவித்தனர். காங்கிரஸுக்கு வாக்களித்ததை “கர்வாப்சி”(வீடு திரும்புதல்) என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து முதல்வர் கமல்நாத் கூறுகையில்“எங்கள் அரசை மைனாரிட்டி அரசு என்று பாஜக தினந்தோறும் கூறிவருகிறது. ஆனால் அவர்களது எம்எல்ஏக்கள் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களையும், பாஜக 109 இடங்களையும், பகுஜன் சமாஜ்கட்சி 3 இடங்களையும், சமாஜ்வாதி கட்சி 1 இடத்தையும், சுயேட்சைகள் 4 இடங்களையும் கைப்பற்றினர். அதிக இடங்களை கைப்பற்றிய காங்கிரஸ் மத்திய பிரதேசத்தில் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. எந்த நேரமும் கவிழலாம் என்னும் நிலையில் அக்கட்சிக்கு ஆதரவாக இரு பாஜகவினர் இருப்பது அக்கட்சி தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...