கூடா நட்பு கேடாய் விளைந்தது : பறிபோனது பெண் டிஎஸ்பி உயிர்

கூடா நட்பு கேடாய் விளைந்தது : பறிபோனது பெண் டிஎஸ்பி உயிர்

Follow us on Google News Click Here

பெங்களூரூவில் பெண் காவல் அதிகாரி லட்சுமி, நண்பரின் வீட்டில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரூ கோலார் மாவட்டம் மாலூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கேஷ். அரசுத்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவரின் மகள் லட்சுமி ( வயது32). பொறியியல் பட்டதாரியான இவர் 2014- ஆம் ஆண்டு கர்நாடக காவல் சர்வீஸில் தேர்ச்சி பெற்றார். கர்நாடக மாநில CBCID பிரிவில் DSP யாக பணியாற்றி வந்தார். தன்னுடன் கல்லூரியில் படித்த நவீன் என்பவரை காதலித்து லட்சுமி கல்யாணம் செய்து கொண்டார். இந்த தம்பதி பெங்களூரூ அன்னபூர்னேஸ்வரிநகரில் வசித்து வந்தனர். ஹைதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் நவீன், மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை .கடந்த 2 தினங்களுக்கு முன்பு பணி காரணமாக நவீன், ஹைதராபாத்திற்கு சென்றுவிட்டார். லட்சுமி வசித்து வந்த பகுதியை சேர்ந்த மனோ என்பவர் வீட்டில் மதுவிருந்து நடத்தப்பட்டுள்ளது. இதில், லட்சுமியும் கலந்து கொண்டுள்ளார். மதுவிருந்தில் லட்சுமியுடன் அவரின் சக நண்பர்கள் பிரஜ்வல், மனோ உள்ளிட்ட 4 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

அனைவரும் மதுபானம் அருந்திய நிலையில் திடீரென்று, மாடிக்கு சென்ற லட்சுமி, கதவை அடைத்து கொண்டார். நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த சக நண்பர்கள் கதவை தட்டி திறக்கும்படி கூறினர். ஆனால் , அறையிலிருந்து எந்த பதிலும் இல்லை. இதையடுத்து , கதவை உடைத்து உள்ளே பார்த்த போது, அங்கிருந்த ஜன்னல் கம்பியில் லட்சுமி துப்பட்டாவால் தூக்கிட்ட நிலையில் கிடந்தார். தொடர்ந்து , அன்னபூர்னேஸ்வரிநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு காவல் அதிகாரிகள் சென்று பார்வையிட்ட போது, லட்சுமியின் கால் தரையை தொட்டபடி இருந்ததை கண்டனர். இதனால் , சந்தேகமடைந்த போலீசார் லட்சுமியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மதுவிருந்துக்கு ஏற்பாடு செய்த மனோ மாநகராட்சியில் பல்வேறு துறைகளில் டென்டர் எடுத்து வந்துள்ளார். அரசியல் செல்வாக்கு காரணமாக, கொரோனா காலட்டத்தில் கோவிட் மையங்களையும் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார். அன்னபூர்னேஸ்வரி நகரில் மதுபான விருந்து நடத்துவதற்கென்றே தனியாக வீடு கட்டியதாக தெரிகிறது. இந்த வீட்டுக்கு வந்த போதுதான் லட்சுமி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்போது, லட்சுமியுடன் மதுவிருந்தில் பங்கேற்ற மனோ உள்ளிட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே வேளையில், லட்சுமிக்கும் கணவர் நவீனுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாகவும் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டதாக உறவினர்கள் கூறுகின்றனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow us on Google News Click Here

கருத்தை சொல்லுங்கள் ...

error: Content is protected !!