சிலைக் கடத்தல் வழக்கில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு – பொன்.மாணிக்கவேல்

சிலைக்கடத்தல் வழக்குகளில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட டி.எஸ்.பி. காதர் பாஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், பழவலூர் சிலைக்கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைக்க முயற்சி நடப்பதாக மனுதாரர் கூறியுள்ளார். அவருடன் கூட்டுசேர்ந்து அதிகார ரீதியில் தன்னை பழிவாங்கும் நோக்கில் சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் செயல்படுவதால், அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி, பொன்.மாணிக்கவேல் மற்றும் யானை ராஜேந்திரன் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் பொன்.மாணிக்கவேல் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், யானை ராஜேந்திரன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அப்போது ஆஜரான பொன்.மாணிக்கவேல் தரப்பு, சிலைக்கடத்தல் சம்பவங்களில் இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவலை வெளியிட்டது.
சிலைக்கடத்தல் வழக்குகளில் விசாரணை நேர்மையான நடைபெற்றதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சிலைக்கடத்தல் வழக்கில் 2 அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்ததை உரிய ஆதாரங்களுடன் மனுவாக தாக்கல் செய்ய பொன்.மாணிக்கவேல் தரப்புக்கு உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை ஆகஸ்ட் ஆறாம் தேதிக்கு ஒத்திவைத்தார்.