தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாசகர் விரும்பும் செய்தியை வழங்குகிறோம்: டெய்லிஹன்ட் தலைவர் உமங் பேடி

டெல்லி: இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்தும், மக்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் விரைவாக வளர்ந்துள்ளதுடன், நாட்டு மக்கள் செய்தியை அணுகும் விதமும் மாறியுள்ளது. சமீப காலமாக பயனர் நடத்தை, எவ்வாறு உருவாகியுள்ளது என்பது பற்றி விரிவாக விளக்கி எடுத்துரைத்தார் ‘டெய்லிஹன்ட்’ தலைவர் உமங் பேடி. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பிராந்திய மொழி செய்திகளை “ஆழ்ந்த தனிப்பயனாக்குதல்” வாயிலாக வழங்குவது தொடர்பாக ‘சிஎன்பிசி டிவி 18’ டிவி சேனலுக்கு வழங்கிய பேட்டியில், உமங் பேடி விளக்கமாக தெரிவித்தார். டெய்லிஹன்ட், என்பது செய்திகளை ஒருங்கிணைப்பது மட்டுமல்ல என்றும், “செய்திகளை கண்டுபிடிப்பதற்கான இடம்” என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது: பயனர் தனியுரிமை அல்லது விவரங்களில் எந்த ஒரு சமரசமும் செய்யாமல் ஆழ்ந்த தனிப்பயனாக்குதலுடன் செய்திகளை வழங்கும் திறனை டெய்லிஹன்ட் கொண்டுள்ளது. இது பயனாளர்கள் உருவாக்கும் செய்தி கட்டுரை கிடையாது, தொழில்முறைப்படி உருவான செய்தி கட்டுரை. செய்திகள் சேகரிப்பு பற்றி சொல்ல வேண்டுமானால், எங்களுக்கு, 10,000 மேற்பட்ட, செய்தியாளர்கள் இந்தியா முழுக்க இருந்து, செய்திகளை வழங்குகிறார்கள். 14-15 இந்திய பிராந்திய மொழிகளில் செய்தி கட்டுரைகளை வழங்கி வருகிறோம்.
எங்களது சொந்த செய்தி கட்டுரைகளை வழங்க ஆரம்பித்துள்ளோம். சொந்தமாக ஸ்டூடியோக்களை ஆரம்பித்துள்ளோம், வருங்காலத்தில் சில ஷோக்களை வழங்க உள்ளோம் என்றார் அவர். செய்தி உருவாக்கத்திற்கும், ஒருங்கிணைத்து வழங்கியமைக்குமான வித்தியாசம் பற்றி கேட்டபோது, “உண்மையில், செய்தியை நாங்கள் உருவாக்குவதில்லை. ‘ஒன்இந்தியா’ தளத்தை நாங்கள், வாங்கியுள்ளோம். அவர்கள் செய்தி கட்டுரைகளை வழங்குகிறார்கள்” என்றார் உமங் பேடி.
தொழில்நுட்பம் மற்றும் இயந்திர அறிதல் தொடர்பான கேள்விக்கு, “நாங்கள் ஒரு தொழில்நுட்ப தளமாக இருக்கிறோம், ஒரு செய்தி உள்ளடக்க நிறுவனம் அல்ல. எங்கள் பார்ட்னர்களிடமிருந்து செய்தி உள்ளடக்கங்களை வாங்கி எங்களது தளத்தில் வெளியிடுகிறோம். 15 வெவ்வேறு மொழிகளில் இருந்து, செய்திகளை வாங்குகிறோம். அந்த செய்தி என்ன சொல்கிறது என்பதை ஆய்வு செய்கிறோம். தலைப்பு, செய்தியின் உள்ளடக்கம் என அனைத்தையும் சரி பார்க்கிறோம்.
வீடியோ, புகைப்படங்களையும் கவனிக்கிறோம். அது எந்த கோணத்திலான செய்தி என்பதை புரிந்துகொள்ள முயல்கிறோம். அதை 25,000 வித்தியாசமான வகைப்பாடுகளின் அடிப்படையில், பிரிக்கிறோம். ஒரு வாசகர், செய்தி உள்ளடக்கத்தை வாசிக்க ஆரம்பித்ததுமே, எந்த மாதிரியான செய்திகளை அவர் வாசிக்கிறார், எவ்வளவு நேரத்தை செலவிடுகிறார், லைக் மற்றும் டிஸ்லைக் சிக்னல்கள் எப்படி உள்ளன, கமெண்ட்ஸ், ஷேர் அளவு என்ன, எப்படி உள்ளது என்பது இயந்திர வழிமுறை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறியப்படுகிறது. அந்த அடிப்படையில், தனிப்பட்ட பயனாளர்களுக்கு, அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையிலான செய்திகளை வழங்குகிறோம்” என்ற உமங் பேடி, இது எப்படி பேஸ்புக் மாடலில் இருந்து வித்தியாசமானது என்பதையும் விளக்கினார்.
“பேஸ்புக் உட்பட எந்த ஒரு சோஷியல் மீடியா நெட்வொர்க்காக இருந்தாலும் அங்கே உங்களுக்கென்று தனிப்பட்ட கணக்கு இருக்கும். அதை வைத்து உங்களைப் பற்றி அவர்கள் அனைத்தையும் அறிந்து வைத்திருப்பார்கள். ஆனால், எங்களது செய்தி வழங்கும் நடைமுறை இப்படியானது இல்லை. நீங்கள் சைன்-இன் செய்ய வேண்டிய தேவையே கிடையாது. நீங்கள் வேறு பயன்பாட்டுக்காக சைன்-இன் செய்துகொள்ளலாம், ஆனால் செய்தி வழங்குவதற்கு அப்படியான நிபந்தனை ஏதும் இல்லை. அடையாளம் வழங்காத வாடிக்கையாளர்களுக்கும், அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப இயந்திர அறிதல் முறையில், செய்திகளை வழங்குகிறோம். ஜிஎஸ்டியோ அல்லது பண மதிப்பிழப்போ அல்லது, 2019ம் ஆண்டுக்கான தேர்தலோ..
நாங்கள் செய்தி கட்டுரைகளை வாங்கும், ஒவ்வொரு பப்ளிஷருக்கும் ஒரு, கருத்து இருக்கும். இடதுபக்கமாகவோ, வலது பக்கமாகவோ அவர்கள் இருக்க கூடும். ஆனால், நாங்கள், முழுக்க நடுநிலையாகவும், மையத்திலும் செல்லக்கூடியவர்கள். குடிப்பிட்ட வாசகர், எந்த மாதிரி செய்திகளை வாசிக்கிறாரோ, அல்லது வீடியோக்களை பார்க்கிறாரோ, அதற்கு மாறுபட்ட கோணம் கொண்ட வேறு ஒரு பப்ளிஷரின் செய்தியையும், அந்த வாசகருக்கு கலந்து காண்பிப்போம்” என்றார் திட்டவட்டமாக. எதிர்கால திட்டங்கள் குறித்தும் உமங் பேடி குறிப்பிட தவறவில்லை. “நாங்கள் இப்போது சுமார் 30-40 சேனல்களை தொடங்கிக்கொண்டிருக்கிறோம் அல்லது தொடங்க போகிறோம். 543 சேனல்கள் எங்கள் ஆப் வழியாக, இந்தியாவின் 543 தொகுதிகளுக்குச் செல்லும். எடிட்டோரியலில் சார்பு நிலை இருக்க கூடாது என்பதில் இன்னும் அதிக கவனம் செலுத்துகிறோம்.
சிறு செய்தியாளர்கள், பெரிய பப்ளிஷர்கள் என அனைவரது செய்தி கட்டுரைகளும் கலந்து தரப்படுகிறது. இதன்மூலமாக, ஒரு முழுமையான பார்வையை அளிக்கிறோம். உண்மையில் இது எங்கள் தொலைக்காட்சி பிரச்சாரத்தின் தொடங்கமாகும். அது விரைவில் வரப்போகிறது ” என்று அவர் கூறினார். போலி செய்திகளை கட்டுப்படுத்துவது பற்றி பேசிய உமங் பேடி, “போலி செய்திகள், மிகப்பெரிய தொல்லை தரும் விஷயமாக மாறியுள்ளது. போலி செய்தி எங்கு துவங்குகிறது? ஒரு வெறும் போலி அல்லது பிரச்சார நோக்கத்திற்காக துவங்கப்படுகிறது. அல்லது ஒரு பயனரால் தொடங்கப்பட்டுகிறது. ஆனால், நாங்கள் பயனர் உருவாக்கிய செய்தி உள்ளடக்கத்தை அனுமதிப்பதில்லை. எனவே, செய்தியாளர்கள் மூலமாக வரும் அனைத்து செய்தி உள்ளடக்கமும், எடிட்டோரியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. டெய்லிஹன்ட்டில் 450 பேரும், ஒன்இந்தியாவில், 400 பேரும், என மிகப்பெரிய எடிட்டோரியல் குழு எங்களிடம் உள்ளது. எனவே கிடைக்கும் செய்திகளின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்த பிறகே அவற்றை வெளியிடுகிறோம். இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும்.
முன்னணி பப்ளிஷர்கள் வழங்கும் செய்திகூட சில நேரங்களில் போலி செய்தியாகும் வாய்ப்பு உள்ளது. இதை சரி செய்ய 3 விஷயங்களை மேற்கொள்கிறோம். நாங்கள், ஒவ்வொரு பப்ளிஷர்களுக்கான தர மதிப்பீடு, ஒவ்வொரு செய்தி கட்டுரைக்கும் தர மதிப்பீடு அளிக்கிறோம். குறைந்தது, 2 பயனாளர்களிடமிருந்தாவது, குறிப்பிட்ட செய்தி போலியானது என்று ‘ஃபிளாக்’ செய்யப்பட்டால், நாங்கள் முறைப்படி சோதித்து பார்த்து, பப்ளிஷரிடமே அதுபற்றி தெரிவிப்போம். முக்கியமாக, அரசியல் ரீதியான கட்டுரைகளை சிறு பப்ளிஷர்களிடமிருந்து நாங்கள் பெறுவதில்லை. அதேநேரம், எங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ள செய்தியாளர்கள் வழங்கும் அரசியல் செய்தி என்றால் அதை வெளியிடுவோம். அரசியல் செய்தி கட்டுரைகளை, முன்னணி மற்றும் அனுபவம் உள்ள நன்மதிப்பு கொண்ட, பப்ளிஷர்களிடமிருந்து மட்டுமே பெற்று வெளியிடுகிறோம்” என்றார் உமங் பேடி.