நாடாளுமன்றத்தில் அதிமுக, திமுக கடும் அமளி.. தபால் துறை தேர்வுகள் ரத்து.. அமைச்சர் அறிவிப்பு

டெல்லி: தபால்துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளார்.
தபால் துறையில் தபால்காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் கேள்விகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருந்தன. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டன.
இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரத்தை தமிழகத்தைச் சேர்ந்த திமுக எம்பிக்கள் நேற்றைய தினம் மாநிலங்களவையில் எழுப்பினர். தபால்துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், தேர்வை ரத்து செய்துவிட்டு தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் தேர்வை ரத்து செய்யும்படி வலியுறுத்தினர்.
சமாதானம்
இந்த நிலையில் ராஜ்யசபா இன்று காலை கூடியதும் அதிமுக எம்பிக்கள் இந்த பிரச்சினையை மீண்டும் எழுப்பினர். அவர்களை அமைதி காக்கும்படி சபாநாயகர் ஓம் பிர்லா கேட்டுக் கொண்டார். எனினும் அதிமுக எம்பிக்கள் சமாதானம் அடையாமல் அமளியில் ஈடுபட்டனர்.
ஏற்கவில்லை
தபால் துறை தேர்வை தமிழில் நடத்துவதற்கு உத்தரவிடக் கோரி முழக்கம் எழுப்பினர். ஒரு கட்டத்தில் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளிப்பார் என கூறியும் அதை அவர்கள் ஏற்கவில்லை.

