முதியோருக்கு இலவசமாக உணவு வழங்கும் ஹோட்டல் உரிமையாளர்

வேலுார் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையம் பக்கத்தில் உள்ளது ஹோட்டல் ஏலகரி. காலை ஏழு மணியில் இருந்து வயதானவர்கள், பெண்கள், மனநிலை சரியில்லாதவர்கள் என்று ஒரு பாவப்பட்ட கூட்டமே வந்து தங்களுக்கு பிடித்த இட்லி, பூரி, தோசை, புரோட்டா போன்றவைகளை வாங்கி உட்கார்ந்து சாப்பிட்டு விட்டு பின், கல்லாவில் உட்கார்ந்திருக்கும் கடை உரிமையாளர் நாகராஜிடம் ‘காசுக்கு’ பதிலாக வணக்கம் மட்டும் தெரிவித்துவிட்டு செல்கின்றனர்.

இது போக நகரசுத்தி தொழிலாளர்கள், கை வண்டி இழுப்பவர்கள் போன்ற எளிய தொழிலாளிகள் மற்றும் மாணவர்களுக்கு உணவு பண்டங்கள் பாதி விலைதான்.மேலும் நாள் முழுவதும் கைக்குழந்தையுடன் பால் கேட்டு வருபவர்கள் கையில் காசு இருந்தால் கொடுக்கலாம் இல்லை என்றால் பாலை மட்டும் வாங்கிக் கொண்டு செல்லலாம்.

நீண்ட காலம் ஓட்டல் தொழிலாளியாக இருந்ததினால் இந்த தொழில் அத்துப்படியாக, தனியாக ஓட்டல் துவங்கினார். ஹோட்டல் ஏலகிரியில் இட்லி, தோசை, பூரி, புரோட்டா, குஸ்கா என்ற எல்லாமும் ருசியாக கிடைக்கும். நாகராஜ் தானே கடைக்கு தேவையான தரமான உணவு பொருளை தேடி வாங்குவதாலும், அதனை தரமான முறையில் தயாரிப்பதாலும், நியாயமான விலையில் விற்பதாலும் நல்ல வியாபாரம் நடக்கும்.வருடத்தில் 365 நாளும் இவரது கடை திறந்திருக்கும், இரவில் ஐந்து மணி நேரம் துாங்கும் நேரம் போக மீதம் இருக்கும் நேரம் முழுவதையும் கடையில்தான் செலவழிப்பார்.