ஹெல்மெட் வழக்கு: தமிழக உயரதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

ஹெல்மெட் விதிகளை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உயரதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தக் கோரி ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கனவே உத்தரவிட்டபடி முக்கிய போக்குவரத்து சிக்னல்களில் பதிவான ஒரு நிமிட கண்காணிப்பு கேமரா காட்சிகள் அரசுதரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.
அதைப் பார்த்த நீதிபதிகள், 300க்கும் அதிகமானோர் ஹெல்மெட் அணியாமல் செல்வதையும், அவர்களை தடுக்காமல் காவல்துறையினர் சிலைபோல் நின்று பார்த்துக்கொண்டு நிற்பதையும் பார்க்க முடிவதாக குற்றஞ்சாட்டினர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளில் இடம்பெற்றுள்ள காவல்துறை அதிகாரிகளின் பட்டியலை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், ஹெல்மெட் விதிகளை முழுமையாக செயல்படுத்தாத அதிகாரிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உயரதிகாரிகள் மீது நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்தனர். இதையடுத்து இந்த வழக்கு ஜூலை 26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.