உலக அளவில் மிக மோசமான ரெயில் விபத்தாக பதிவானது ஒடிஷா ரயில் விபத்து
உலக அளவில் மிக மோசமான ரெயில் விபத்தாக பதிவானது ஒடிஷா ரயில் விபத்து

மேற்குவங்காள மாநிலம் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரலுக்கு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12841) இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மேற்குவங்காளத்தின் ஹவுராவுக்கு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12864) இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஷாலிமாரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று வந்துகொண்டிருந்தது. அதேபோல், பெங்களூருவில் இருந்து ஹவுரா நோக்கி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று சென்றுகொண்டிருந்தது.
பெங்களூரு-ஹவுரா ரெயில் நேற்று இரவு 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பகனகா பஜார் ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தது. அப்போது பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டன. தடம் புரண்ட ரெயிலின் சில பெட்டிகள் அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தன.

அப்போது, அந்த தண்டவாளத்தில் ஷாலிமார் நகரில் இருந்து சென்னை சென்டிரல் நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் வேகமாக வந்துகொண்டிருந்தது. இதனால், தடம்புரண்ட பெங்களூரு-ஹவுரா ரெயில் பெட்டிகள் மீது சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் அதிவேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சில பெட்டிகள் தடம் புரண்டு அருகில் உள்ள தண்டவாளத்தில் விழுந்தன.
அப்போது, அந்த தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயில் விபத்துக்குள்ளான சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகள் மீது அதிவேகமாக மோதியது. மொத்தம் 3 ரெயில்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 280 ஆக உயர்ந்து உள்ளது.மேலும், 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து சமீப காலங்களில் இந்தியாவில் நடந்த மிக மோசமான ரெயில் விபத்துகளில் ஒன்றாகும் மற்றும் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
