குவைத்தில் கொடுமைப்படுத்தப்படுவதாக வீட்டு வேலைக்காக சென்ற மதுரை பெண் கதறல்…!

குவைத்தில் கொடுமைப்படுத்தப்படுவதாக வீட்டு வேலைக்காக சென்ற மதுரை பெண் கதறல்…!

வீட்டுவேலைக்காக குவைத்திற்குச் சென்ற மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், அங்கு தான் சித்திரவதை செய்யப்படுவதாகவும், இந்தியா திரும்ப உதவி செய்யுமாறும் சமூகவலைதளம் மூலம் கோரிக்கை வைத்திருப்பது வைரலாக பரவி வருகிறது. மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் மதுரையில் உள்ள தனியார் ஏஜென்சி மூலம் வீட்டு வேலை செய்வதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன் குவைத் சென்றுள்ளார். இந்நிலையில், சமூக வலைதளம் மூலம் வீடியோ வெளியிட்டுள்ள மகேஸ்வரி, குவைத்தில் தான் அடித்து சித்ரவதை செய்யப்படுவதாகவும், தனக்கு உண்ண உணவோ, ஓய்வோ, ஊதியமோ கொடுக்கப்படுவதில்லை என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார். தன்னோடு சேர்த்து 4 பெண்கள் குவைத் அழைத்துவரப்பட்டதாகவும், அவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ள மகேஸ்வரி, தங்களை மீட்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வீட்டு வேலை செய்வதற்காக தான் குவைத் சென்றிருந்த போது, அங்கு தனது கைகள் இரண்டும் ஒடிக்கப்பட்டதாக தாயகம் திரும்பிய திருப்பூர் பெண் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார். சென்னை பத்தரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன்னைப் போல பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மீட்க அரசு விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுவதைத் தடுக்க புலம்பெயர்வோர் சட்டத்தை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தேசிய வீட்டுவேலை தொழிலாளர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வளர்மதி வலியுறுத்தியுள்ளார்.

இதையும் பாருங்க:  நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு வலுக்கிறது எதிர்ப்பு