கொடைக்கானல் போனால் கொண்டாட்டம் தான்… சாரல் மழை வரவேற்கிறது

கொடைக்கானல்:
கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் மூடுபனியுடன், மழை பெய்து வருகிறது. மூலிகை வாசத்துடன் சாரல் மழை பெய்வதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
மழையில் நனைந்தப்படி சுற்றுலா இடங்களை, பார்வையிட்டு மகிழ்ந்து வருகின்றனர் சுற்றுலா பயணிகள். கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது சாரல் மற்றும் இதமான மழை பெய்து வருகிறது. கொடைக்கானல், செண்பகனூர், பிரகாசபுரம், அட்டக்கடி, இருதயபுரம், வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்தது.
இதனால், மலை கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த உருளை கிழங்கு, கேரட், பீன்ஸ், முள்ளங்கி ஆகிய காய்கறி பயிர்களின் விளைச்சலுக்கு ஏற்றதாக தற்போதைய அமைந்துள்ளது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கொடைக்கானல் புறநகர் பகுதிகளில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்தது.
தற்போது பெய்து வரும் பலத்த மழையினால் நீரோடை பகுதிகளிலும் நீர்வரத்து பகுதிகளிலும் தண்ணீர் வரத்து வரத் தொடங்கி உள்ளது. இதனால், குடிநீர் தட்டுப்பாடு நீங்கி இருப்பதாக உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர். மேலும், சில நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருப்பதால் கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொடைக்கானல் நகர் மட்டுமின்றி மேல்மலை, கீழ்மலை கிராமப்பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் விவசாயிகள் நிம்மதி அடைந்துள்ளனர். சுற்றுலா பயணிகள் சீதோஷண நிலையை அனுபவித்து வருகின்றனர்.